எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் மற்றும் எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிதலமடைந்த குடியிருப்புகளை சீரமைத்து, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்து தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் மக்களின் அவல நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை துரைப்பாக்கத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணகி நகர், சுனாமி நகர் மற்றும் எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 23 ஆயிரத்து 704 குடியிருப்புகள் உள்ளன. சென்னை நகரத்தின் மையப் பகுதியில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள், இந்த குடியிருப்புகளில் வாழும் மக்களுக்குக் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் பல பகுதிகளில் வசித்துக் கொண்டிருந்த மக்கள், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் போன்ற தொலைவான இடங்களில் குடி அமர்த்தப்பட்ட நிலையில், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதையும், சரியாக அமைத்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அடிப்படை தேவைகளான சுத்தமான தண்ணீர், பெண்களின் பாதுகாப்பு, தெருவிளக்கு, சமூக விரோதிகளை அகற்றுதல், சுகாதாரமான சூழல், முறையான மருத்துவ வசதி போன்ற ஏதுவுமே இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு.
சுனாமி நகர் குடியிருப்பில் திட்டமிட்ட நேரத்தில் குடிநீர் வழங்காமல், திடீரென திறந்து விடப்படுவதால், வீட்டில் இல்லாமல் வேலைக்கு சென்றிருக்கும் மக்கள், குடிநீரை பிடித்து வைத்துக்கொள்ள இயலாமல் அவதிக்குள்ளாவதாக, இல்லத்தரசிகள் மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர்.
இரண்டு வீடுகளுக்கு ஒரு மேல்நிலை தொட்டி உள்ளதால், தேவையான நீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதாகவும், இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் இருப்பவர் முடிந்த அளவு நீரை சேமித்துக் கொள்வதால், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் சமமாகக் கிடைப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதால், சமைப்பதற்கும், குடிப்பதற்கும் கேன் தண்ணீரை விலைக்கு வாங்கி வருவதாகவும், கட்டிடங்களின் மாடியில் உள்ள நீர் தேக்க தொட்டிகளில் இருந்து நீர் கசிந்து வீணாவது மட்டுமின்றி, கட்டிடங்கலும் சேதமடைவதாக சுனாமி நகர் குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எழில் நகர் குடியிருப்பில் உள்ள மின்சார கேபிள் வயர்கள், மின் இணைப்பு பெட்டிகள் சிதலமடைந்து திறந்த வெளியில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளதால், உயிர் பயத்துடனே வாழும் நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மக்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் கூற முடியாத அமைச்சர் அங்கிருந்து உடனடியாக புறப்பட முயற்சித்தார். இருப்பினும் மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தனர். இதனை எதிர்கொள்ள முடியாமல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட்டம்பிடித்த சம்பவமும் அரங்கேறியது.
ஆகவே கண்ணகி நகர், சுனாமி நகர் மற்றும் எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிதலமடைந்த குடியிருப்புகளை சீரமைத்து, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்து தரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.