அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக- இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனக் கூறியுள்ளது.  இதனால் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. 

நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் நாளை மறுநாள் வரை சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

Night
Day