எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக அரசைக் கண்டித்து, கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், தமிழக அரசை கண்டித்து சாட்டையடி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் எனவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று கோவையில் உள்ள தனது வீட்டுக்கு வெளியே பச்சை நிற வேட்டி அணிந்த அண்ணாமலை, தன்னைத் தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தினார். அவர் சாட்டையால் அடித்துக் கொண்டபோது, வெற்றிவேல், வீரவேல் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, சாட்டையடி தனக்காக அல்ல, சமூகத்தில் உள்ள அவலங்களுக்காக என தெரிவித்தார். இந்த போராட்டம் தனி மனித போராட்டம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், FIR வெளியானதன் மூலம் மாணவியின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.