எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டதாகவும், தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குற்றவாளிகள் திமுகவினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுவதாகவும் சாடியுள்ளார். மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிவதாகவும், உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.