அண்ணா பல்கலை.யில் தேசிய மகளிர் ஆணையம் நேரில் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் என்ற  திமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திய நிலையில், இந்த வழக்கை விசாரிக்க, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. 

இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. அதன்படி, டெல்லியில் இருந்து வந்துள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சித் ஆகியோர், அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்ட அதிகாரிகள், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள்,  குறிப்பாக மாணவிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, பல்கலைக் கழக மாணவர்கள், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் தேசிய மகளிர் ஆணைய குழு விசாரணை நடத்தவுள்ளது. விசாரணைக்குப் பின்னர், இது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தேசிய மகளிர் ஆணையத்துக்கு இந்தக் குழு பரிந்துரைக்க உள்ளது.

Night
Day