எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திமுக பிரமுகர் ஞானசேகரனை, நாளை வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் ஆவணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவினர், செல்போனில் உள்ள ஆடியோக்கள் குறித்து குரல் மாதிரி தடவியல் சோதனை செய்ய அனுமதிக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில், ஞானசேகரனிடம் குரல் மாதிரி தடவியல் பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் ஞானசேகரனிடம் குரல் மாதிரி தடவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 3 மணிநேர பரிசோதனை நிறைவடைந்ததை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சைதாப்பேட்டை 11 வது குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்ட்ரேட் சுல்தான் ஹர்ஹான் முன்பு ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். நாளை வரை நீதிமன்ற காவலில் ஞானசேகரனை சிறையில் அடைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.