அண்ணா பல்கலை. விவகாரம் - தமிழக அரசுக்கு கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ஞானசேகரனின் 7 நாள் போலீஸ் காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்த சம்பவத்தில் எஃப் ஐ ஆர் கசிந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய சம்பவம் நடந்தபோது சார் என்று கூறி அவர் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி கூறிய நிலையில், அந்த நபர் யார் என்று எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பி போராட்டங்களில் ஈடுபட்டன.

பிரச்னை தீவிரமடைந்த நிலையில், சம்பவம் குறித்து குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் ஞானசேகரன் வீட்டில் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து ரகசிய இடத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். கடந்த 21ம் தேதி அவருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அது வெறும் நாடகம் என்பது மருத்துவ பரிசோதனையில் அம்பலமானது. இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறி ஞானசேகரனுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

திமுக பிரமுகர் ஞானசேகரனின் 7 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கும் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்கள் இன்னும் பொதுவெளியில் உள்ளதா, மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார், எஃப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் பதிவு செய்த எஃப்ஐஆரின் நிலை என்ன என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Night
Day