எழுத்தின் அளவு: அ+ அ- அ
பழனி முருகன் கோயில் கிரிவலப் பாதையில் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட குடிநீர் குழாய் மேல் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரை நகராட்சியின் அனுமதியின்றி இடித்ததை கண்டித்து 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், கோயில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 1929 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பழனி நகரின் குடிநீர் தேவைக்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் எந்தவித மோட்டார் பயன்படுத்தாமல் உந்துவிசை மூலமாக 14 கிலோமீட்டர் தூரம் குடிநீர் தானாக பயணித்து பழனி மலை கோயிலுக்கு செல்கிறது. தற்போது இந்த குடிநீர் குழாய், பழனி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மூலம் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட குடிநீர் குழாயின் மேல் பகுதியில் சுற்றுச்சுவர் உள்ளது. தற்போது கிரிவலப் பாதையில் உள்ள சுற்றுச்சுவரில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் குழாய் சுற்றுச் சுவரை தேவஸ்தான நிர்வாகம் எந்தவித அனுமதி பெறாமல் நேற்று இடித்துள்ளது. இதனால் குடிநீர் குழாய் உடையும் அபாயம் உள்ளதால் இன்று காலை பழனி நகராட்சிக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர்கள் ஒன்று கூடி நகராட்சி பொறியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் பிரசன்னா, நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திருக்கோயில் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தாசில்தார் உறுதி அளித்ததை அடுத்து கவுன்சிலர்கள் கலைந்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.