எழுத்தின் அளவு: அ+ அ- அ
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்த 17 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது அப்போது, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடந்த சோதனையின் போது பெண் அதிகாரிகள் யாரும் தங்க வைக்கப்படவில்லை எனவும், டாஸ்மாஸ் அதிகாரிகளுக்கோ அல்லது அலுவலக உடமைகளுக்கோ எந்த சேதமும் ஏற்படுத்தவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்தது. எதற்காக சோதனைக்கு வந்திருக்கிறோம் என்பதை டாஸ்மாக் நிறுவன தலைவர் மற்றும் மேலாளரிடம் தெரிவித்த பின்னரே சோதனை நடைபெற்றது எனவும், இந்த வழக்கில் பொய்யான தகவல்களை கூறி திசைதிருப்ப முயல்வதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இதையடுத்து இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஜெ.ராஜசேகர் அமர்வு, அமலாக்கத்துறை சோதனையின் போது அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்டதாகவும், சிலர் நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தனர். மேலும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான குற்றம். நாட்டின் நலன் கருதியே சோதனை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அரசியல் பழிவாங்கும் நோக்கம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது, அது நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் மற்றொரு கட்சி, ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு கூறுவது வழக்கமானது தான். ஆனால் நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் நீதியை உறுதி செய்யவே முடியும் எனக் கூறி தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் அமலாக்கத்துறை சட்டப்படி தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்