அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2008-ம் ஆண்டு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்த ஐ.பெரியசாமி, அப்போது வீட்டு வசதி வாரிய வீடு ஒன்றை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 13-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக அறிவித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் வரும் மார்ச் 28-ம் தேதிக்குள் அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகி ஒரு லட்ச ரூபாய் பிணைத் தொகை செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணையை ஒரு மாதத்துக்குள் முடிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஜூலை மாதத்துக்குள் வழக்கை நடத்தி முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார். 

Night
Day