எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சி மேற்கு தொகுதியில் சாலை வசதி, பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அமைச்சர் கே.என். நேரு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட தென்னூர் குத்பிஷாநகர் பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. 28 வது வார்டுக்கு உட்பட்ட இந்த பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி என எந்தவொரு வசதிகளும் செய்து தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாதாள சாக்கடை பணிகளுக்காகவும், குடிநீர் குழாய் பதிக்கவும் தோண்டப்பட்ட சாலைகள் மூடப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு, மேயர் அன்பழகன் மற்றும் வார்டு கவுன்சிலர் பைஸ் அகமது ஆகியோரிடம் மனு அளித்தும், அமைச்சர் நேரில் ஆய்வு செய்தும் தற்போது வரை சாலைகள் சீரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சமூக நீதி பேசும் திமுக அரசு இஸ்லாமியர்களை புறக்கணிப்பதாகவும், வாக்கு வங்கிக்காக மட்டுமே இஸ்லாமியர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற தர வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.