எழுத்தின் அளவு: அ+ அ- அ
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், விசாரணையை ஒத்திவைக்கக்கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மாவட்ட 3-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி D.V. ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமலாக்கத்துறையின் பதில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.