எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தியதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை போலீசார் சுற்றி வளைத்ததால் பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க. சார்பாக நேற்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த இருப்பதாக பாஜக அறிவித்தது. அதன்படி இன்று காலை சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பாஜக முன்னாள் மாநில தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக்கு ஆதரவாக மக்களிடம் அவர் கையெழுத்தை பெற வந்தார்.
அப்போது, கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி பெறவில்லை என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக கூறி தமிழிசையை தடுத்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். ஆனால் அமைதியான கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதி தேவையில்லை என்றும் தீவிரவாதி மாதிரி என்னை ஏன் சுற்றி நிற்கிறீர்கள் என தமிழிசை வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து தமிழிசையை போலீசார் கைது செய்ய முயற்சித்த போது வாகனத்தில் ஏற மறுத்து போலீசாரோடு அவர் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து ஒரு மணி நேரமாக வாகனத்தில் ஏற தமிழிசை மறுத்தார். அவருக்கு ஆதரவாக பாஜக தொண்டர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீசார் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
போலீசார் சுற்றி வளைத்து நின்ற நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், அமைதியான முறையில் மக்களை சந்தித்து கையெழுத்துப் பெறுவதை தமிழக அரசு தடுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். தமிழக காவல்துறை அராஜகமாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற போலீசார் அனுமதி அளித்தனர். அதன்படி தமிழிசை சவுந்தரராஜன் கையெழுத்துப் பெற்று விட்டு தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.