எழுத்தின் அளவு: அ+ அ- அ
பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டர் அவதார திருவிழாவின் போது போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களை போலீஸால் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியில் அய்யா வைகுண்டர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கனவே சாமி தரிசனம் மேற்கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நீதிமன்ற தரப்பில் விசாரணை நடத்தி அய்யா வைகுண்டத்தில் யார் வேண்டுமானாலும் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் என்றும், அன்னதானம் மற்றும் சமைக்க கூடாது என உத்தரவு வழங்கியது. இந்த நிலையில் ஒரு தரப்பினர் இன்று காலையில் அய்யா வைகுண்டர் கோவில் அன்னதானத்திற்காக உணவை சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மற்றொரு தரப்பினர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அன்னதானத்திற்காக வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை அப்புறப்படுத்தினர்.
இதனால், ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் காவல்துறையினரை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் வேனில் ஏற்றினர்.. இருப்பினும், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதட்டமான சூழல் நிலவியது.