அரசியல் கொலைகள் அதிர்ச்சி அளிக்கிறது - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

திமுக ஆட்சியில் ஒரே நாளில் மூன்று அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது, மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதாகவும், சின்னம்மா குற்றம்சாட்டியுள்ளார். புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் எடுக்கப்பட்டது போன்று, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திட வேண்டும் என்றும், திமுக விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக தலைமையிலான ஆட்சியில் ஒரே நாளில் மூன்று அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை தனது பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக இந்த விளம்பர அரசுக்கு தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் நிலையில், அதனை மெய்ப்பிக்கும் வகையில், தற்போது அரசியல் பிரமுகர்கள் வெட்டி படுகொலை செய்யப்படுவது நாள்தோறும் அரங்கேறுகிறது- இவற்றையெல்லாம் தடுப்பதற்கு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு, நாள் தவறாமல் நடைபெறும் படுகொலைகளை தடுக்க தவறிய திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக, புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

கடலூர் நவநீதம் நகரை சேர்ந்த 25வது வார்டு கழக அவைத்தலைவரான பத்மநாபன், நேற்றைய தினம் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த மர்ம கும்பலால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் - அதேபோன்று, சிவகங்கை மாவட்டம் வேலாங்குளத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி செல்வகுமார், சிவகங்கை- இளையான்குடி சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு தனது  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்துள்ளனர்- மேலும், இதே நாளில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே பாரதப்பள்ளி குன்னத்துவிளையைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜாக்சன், ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்- ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக, கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 
 
தமிழ்நாட்டில் இன்றைக்கு எங்கு பார்த்தாலும் போதைப் பொருள் நடமாட்டம் தலைவிரித்து ஆடுகிறது- போதைப் பொருள் இல்லாத இடமே இல்லை எனும் அளவிற்கு, எங்கு பார்த்தாலும் போதையில் தள்ளாடும் இளைஞர்கள் மற்றும் முதியவர்களை காணமுடிகிறது- தமிழகத்தில் இன்றைக்கு கஞ்சா மற்றும் வினோதமான புதுவடிவில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன- போதைப் பொருள் விற்பனை கூடாரமாக தமிழகம் மாறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது- திமுக தலைமையிலான அரசின் அலட்சியத்தால் போதைக்கு இளைஞர்கள் அடிமையாகி, இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் போதை மற்றும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது- அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், மதுரையில் நாம் தமிழர் கட்சியின் வடக்குத் தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசியல் கொலைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது- அதன் ஒரு பகுதியாக ஒரே நாளில் மூன்று அரசியல் கொலைகள் தற்போது அரங்கேறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது- இதுபோன்ற தொடர் படுகொலைகளால் தமிழக மக்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை திமுக தலைமையிலான அரசு இன்றைக்கு கொலைக்களமாக மாற்றியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது- தமிழகத்தில் திமுக, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருவதை தடுக்கமுடியாமல் வெறும் வேடிக்கை பார்த்து வருவதை விட்டுவிட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் எடுக்கப்பட்டது போன்று கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, தமிழக மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day