எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் ஆகஸ்ட் 28ம் தேதி சென்னை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகாவிஷ்ணு எனும் ஆன்மீக சொற்பொழிவாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர்.
அப்போது அவர் மூடநம்பிக்கையை தூண்டும் வகையில் பாவ - புண்ணியம், மறுபிறவி குறித்து பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை மேடையிலேயே சங்கர் என்ற ஆசிரியர் மட்டும் எதிர்த்து பேசிய சம்பவமும் கவனம் பெற்றது. சங்கர் என்ற அந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி ஆசிரியரை அங்கேயே மகா விஷ்ணு கிண்டல் செய்யும் வகையில் அவமானப்படுத்தி உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து மகா விஷ்ணுவுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து, மாணவ மாணவிகளிடம் பிற்போக்குத்தனமாக பேசியதாகவும், மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறான வார்த்தைகளை குறிப்பிட்டதாகவும் கூறி, மாற்றுதிறனாளிகள் சங்கத்தினர் மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய வேண்டும் என சைதாப்பேட்டை, திருவெற்றியூர் ஆகிய காவல் நிலையங்களில் புகார் மனு அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், மகாவிஷ்ணு மீதான புகார் மகா பூகம்பத்தை கிளப்பியதை அடுத்து, அவரை காவல்துறையினர் தேட முயன்றபோது, ஆஸ்திரேலியாவில் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. எப்படியோ சிக்கி கொள்வோம் என்பதை அறிந்த மகாவிஷ்ணு, சென்னைக்கு வருவதாக அறிவித்தார்.
மேலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விமான நிலையத்தில் விளக்கம் தருவதாக மகா விஷ்ணு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து,
சனிக்கிழமை பிற்பகல் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை, சைதாப்பேட்டை காவல்துறையினர் மாற்று வழியாக அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே அரசு பள்ளியில் பிற்போக்குத்தனமாக பேசிய மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் ரகசிய விசாரணைக்கு பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே மகாவிஷ்ணு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கும் பள்ளி மேலாண்மை குழுவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அதன் தலைவர் சித்ரகலா தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம், தங்களிடம் தெரிவிக்கவில்லை எனவும், பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து அனைத்து உறுப்பினர்களிடமும் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்த புகார் அளிக்க உள்ளதாகவும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பிய மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் டிசம்பர் 3 அமைப்பின் தலைவர் தீபக் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூகத்தை அறிவியல் மயமாக்கும் செயல்கள் வரவேற்கப்படும் அதே நேரத்தில் பிற்போக்குத்தனமான கருத்துக்கள் வருவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அமைப்பை தடை செய்ய வேண்டும் என தீபக் கேட்டுகொண்டார்.