எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடலூர் மாவட்டம் வடலூரில் அரிசி கடையில் கட்டுக் கட்டாக பணம் மூட்டை கட்டி வைக்கப்பட்டதும், அரிசி மூட்டைக்கு பதில் பணமூட்டையை வாடிக்கையாளருக்கு கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
கடலூர் மாவட்டம், வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்தவர் சண்முகம். 40 வயதான இவர் நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசி மண்டி நடத்தி வருகிறார். இந்நிலையில் 22-ஆம் தேதி சண்முகத்தின் மைத்துனர் சீனிவாசன் கடையில் இருந்த போது, மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பூபாலன் என்பவர் காலை 10 மணி அளவில் அரிசி வாங்க வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த சீனிவாசனிடம் 16 கிலோ பிரியாணி அரிசி வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசனும் கடையிலிருந்து 16 கிலோ அரிசியை எடை போட்டு பூபாலனிடம் கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் கடைக்கு வந்த சண்முகம், அரிசி மூட்டைகளை பார்த்த போது அதில் பதினாறு கிலோ அரிசி முட்டை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மைத்துனர் சீனிவாசனிடம் அரிசி மூட்டை எங்கே என கேட்டபோது, அதை வழக்கமாக அரிசி வாங்கிச் செல்லும் பூபாலன் என்ற வாடிக்கையாளரிடம் விற்று விட்டகாக கூறியுள்ளார்.
அந்த மூடையில் 15 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்தேன், அதை பார்க்காமல் அப்படியே கொடுத்துவிட்டாய என சீனிவாசனை திட்டிவிட்டு, பின்னர் பூபாலனின் வீடு எங்கே இருக்கிறது என விசாரித்து, அவருடைய வீட்டிற்கு சென்றார் சண்முகம்.
வீட்டினுள், பூபாலனின் மகள் தாட்சாயினி இருக்க அவரிடம், அரிசி மூட்டையில் இருந்த பணம் எங்கே என கேட்டுள்ளார். அப்போது, 10 லட்சம் ரூபாயை தாட்சாயிணி கொடுத்துள்ளார். மூட்டையில் 15 லட்சம் ரூபாய் வைத்திருந்தேன், வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டும் கொடுக்கறீர்களே என சண்முகம் கேட்டபோது, அதில இவ்வளவுதான் இருந்தது என தாட்சாயிணி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ந்து போன சண்முகம், உடனடியாக வடலூர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை கூறி, காணாமல் போன தனது 5 லட்சம் ரூபாயை கண்டுபிடித்து தருமாறு புகார் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல் போனதாக கூறப்பட்ட பணம் குறித்தும், அந்த மூட்டையையில் ஏன் சண்முகம் 15 லட்சம் ரூபாய் வைத்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரிசி மூட்டையில் 15 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டதாக சண்முகம் கூறும் நிலையில், 10 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்ததாக வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார். உண்மையில் அதில் எவ்வளவு தொகை வைக்கப்பட்டது?. ஏன் அரிசி மூட்டைகளோடு பண மூட்டையை வைக்க வேண்டும்? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே பணமூட்டை குறித்த உண்மையான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.