எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்காததால், நேற்று இரவு 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாடிவாசல் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் எப்போதும் அலங்காநல்லூர், வலசை, ஒத்த வீடு, குறவன் குளம் ஆகிய நான்கு கிராமத்திற்கு பாத்தியப்பட்ட கோவில் காளைகளை முதலில் அவிழ்த்து விடுவது வழக்கம். ஆனால் தற்போது இந்த 4 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட காளைகளுக்கு 900க்கும் மேல் வரிசை எண்களில் மாவட்ட நிர்வாகம் டோக்கன் வழங்கியுள்ளது.
இதனால் காளைகளை அவிழ்க்க முடியாத சூழ்நிலை இருப்பதாக கூறிய மாட்டின் உரிமையாளர்கள் வாடிவாசல் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிற்பகல் ஒரு மணிக்குள் காளைகளை அவிழ்த்து விட மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி கிராம மக்களும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பீரோ மற்றும் சைக்கிள்கள் வழங்குவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி, டோக்கனை பெற்றுக் கொண்ட காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் அதனை, விழா கமிட்டி நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வெற்றியாளர்கள் பாலமேடு பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் மூர்த்தியின் காரையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.