அலட்சியம் காட்டிய மின்வாரியம்... இளைஞரின் கால்கள் துண்டிப்பு... 12-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் அருகே மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், மின்சாரம் தாக்கி இரண்டு கால்களை இழந்த இளைஞரின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.  இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்...

மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால், மின்சாரம் பாய்ந்து இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்டு அரசின் உதவிக்காக காத்திருக்கும் இளைஞர் இவர்தான்...

விழுப்புரம் அருகே உள்ள சோழாம்பூண்டி கிராமத்தில், ஐ.டி.ஐ. முடித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலைக்கு சென்று, மாதம் 12 ஆயிரம் சம்பாதித்து தனது ஏழ்மை குடும்பத்தை காப்பாற்றி வந்தவர் இளைஞர் பூபாலன்.

இளைஞர் பூபாலனின் தந்தை மாரிமுத்து விவசாய கூலி வேலையும், தாய் சத்யா மீன் வியாபாரமும் செய்து வருகின்றனர். 

ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் பூபாலன் சம்பாதித்து, தனது குடும்பத்தை கரை சேர்க்கும் பொறுப்பை சுமந்து நின்ற பூபாலனின் வாழ்க்கை, மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

சோழாம்பூண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மேலே தாழ்வான நிலையில் 22 கிலோ வாட் கொண்ட உயரழுத்த மின்சார கம்பி செல்கிறது.

இப்பகுதியில் இளைஞர் பூபாலன் தனது நண்பர்களுடன் இணைந்து விடுமுறை நாளில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது பள்ளியின் மாடியில் விழுந்த பந்தை பூபாலன் எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.

இதனையடுத்து பூபாலன் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு இளைஞர் பூபாலனுக்கு இரண்டு கால்களும் அகற்றப்பட்டு கிட்டத்தட்ட 45 நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்னர் தற்போது டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே இளைஞர் பூபாலன் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த சம்பவத்தை அறிந்த மின்வாரிய ஊழியர்கள், சம்பவம் நடைபெற்ற மறுநாளே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரே நாளில் புதிய மின் கம்பங்களை நட்டு வைத்து, பள்ளிக்கு மேலே தாழ்வாக சென்ற உயரழுத்த மின்சார கம்பிகளை இடமாற்றம் செய்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக உயரழுத்த மின்சார கம்பிகளை இடமாற்றம் செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ”கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்று சொல்வதை போல, மின்சார வாரிய அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்போது நாள்தோறும் மருத்துவமனைக்கு சென்று இளைஞர் பூபாலனின் துண்டிக்கப்பட்ட இரண்டு கால்களுக்கும் டிரஸ்சிங் செய்ய 4 ஆயிரம் செலவழிக்க வேண்டிய சூழலுக்கு அவரது குடும்பம் தள்ளப்பட்டுள்ளது.

பூபாலனின் மருத்துவச் சிகிச்சைக்கு தேவையான நிதியுதவியையும், வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு வேலையையும் வழங்க வேண்டும் என அவரது குடும்பத்தார் தமிழக அரசிற்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய ஆட்சியாளர்கள் அலட்சியத்துடன் இருந்து வருவதன் காரணமாகவே, அனைத்து துறைகளிலும் உள்ள ஒருசில அதிகாரிகள் அலட்சிய போக்குடன் இருந்து வருவது இளைஞர் பூபாலனின் சம்பவமே சாட்சி...

Night
Day