அழிவு நிலைக்கு ஆவின் செல்வதை தடுத்திடுக - புரட்சித்தாய் சின்னம்மா கோரிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாட்டில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆவின் பால் கொள்முதலிலும், பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியிலும் பின்னோக்கி சென்று விட்டதாக, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார். ஆவின் பால் விநியோகம் எந்தப் பகுதியிலும் சரிவர நடப்பதில்லை- திமுக அரசு மாதம் தோறும் ஆவின் பால் பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்துகிறது - மக்களுக்கு  தேவையான அளவுக்கு பால் விற்பனை செய்யமுடியாததால் மக்கள் கூடுதலாக செலவழித்து தனியார் பாலினை வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் சின்னம்மா தெரிவித்துள்ளார். இந்நிலையில், திமுக அரசு, பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிப்பதையும், தமிழக மக்களை ஏமாற்றுவதையும் விட்டுவிட்டு, ஆவின் நிறுவனம் அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.  

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான விளம்பர அரசு, "அதை செய்துவிட்டோம், இதை செய்துவிட்டோம்" என்று தனது வழக்கமான பாணியில் உண்மைக்கு மாறான தகவல்களை கொடுத்து தமிழக மக்களை எப்படியாவது ஏமாற்றி விடலாம் என்று நாள்தோறும் ஏதாவது ஒரு கட்டுக்கதையை அவிழ்த்துவிடுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

அதுபோன்று தற்போது தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் ஏதோ பெரிய இலக்கை அடைந்துவிட்டதாக மாய பிம்பத்தை உருவாக்க திமுக தலைமையிலான அரசு முயற்சிக்கிறது-ஆனால் நாள்தோறும் ஆவின் பால் சரிவர கிடைக்காமல் அல்லல்படும் தமிழக மக்களுக்கு உண்மை என்னவென்று நன்றாக தெரியும் - இந்தியாவின் பால் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாக உண்மைக்கு மாறான தகவல்களை திமுக தலைமையிலான விளம்பர அரசு வெளியிடுவது மிகவும் கண்டனத்திற்குரியது - இதில் உண்மை என்னவென்றால் ஒட்டுமொத்த இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதுதான் நாடறிந்த உண்மை- இதுதான் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள திமுக தலைமையிலான ஆட்சியின் சாதனை என்று, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆவின் பால் கொள்முதலிலும், பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தியிலும் பின்னோக்கி சென்று விட்டது- ஆவின் பால் விநியோகம் எந்த பகுதியிலும் சரிவர நடப்பதில்லை- தமிழகத்தில் அநேக இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் தனியார் பாலினை மக்கள் வாங்கி செல்கின்றனர்- திமுக தலைமையிலான அரசு மாதம்தோறும்  ஆவின் பால் பொருட்களின் விலையை பன்மடங்கு உயர்த்துகிறது- அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலம் வந்துவிட்டாலே திமுக தலைமையிலான அரசு ஆவின் பால் பொருட்களின் விலையை உயர்த்துவதை வழக்கமாக செய்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் - 4.5 சதவிகித கொழுப்பு கொண்டது, ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது- திமுக அரசு பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை அடியோடு குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக 3.5 சதவிகித கொழுப்பு கொண்ட, அதாவது 1 சதவிகித  கொழுப்பு குறைந்த பாலினை ஊதா நிற பால் பாக்கெட்டில் ஒரு லிட்டர் பாலை அதே 44 ரூபாய் விலைக்கு விற்பனை செய்து சாமானிய மக்களை ஏமாற்றி வருகிறது - இதைத்தான் திமுகவினர் விஞ்ஞான ரீதியிலான ஊழல் புரிவதில் கைதேர்ந்தவர்கள் என்று தமிழக மக்கள் கூறுகின்றனர் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுட்டிக்காட்டியுள்ளார்.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது-அவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட பால் தமிழகம் முழுவதும் விநியோகித்த பிறகு மீதமிருந்த அதிகப்படியான பாலினை பால் பவுடர், வெண்ணை போன்ற பொருட்களை தயாரித்து இதர பிரீமியம் வகை பாலை செறிவூட்டுவதற்கும் பயன்பட்டது - ஆனால் இன்றைய திமுக தலைமையிலான ஆட்சியில் 28 லட்சம் லிட்டர் பால் தான் கொள்முதல் செய்யப்படுகிறது- மேலும், பிரீமியம் வகை பாலுக்கு செறிவூட்ட தேவைப்படும் பால் பவுடர், வெண்ணை போன்ற பொருட்கள், மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களிலிருந்து கூடுதலாக பணம் செலவழித்து வாங்கப்படுகிறது - இது ஒன்றே போதும், திமுக ஆட்சியின் லட்சணத்தை அனைவராலும் எளிதில் புரிந்துகொள்ளமுடியும் - சிறு பிள்ளைகளுக்கு பல வண்ணங்களில் பொம்மைகளை காட்டுவது போல், திமுக தலைமையிலான அரசு பல வண்ணங்களில் பால் பாக்கெட்டுகளை காண்பித்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைப்பது எந்த விதத்தில் நியாயம்?-
ஆவின் பால் கொள்முதல் ஏன் குறைந்து கொண்டே இருக்கிறது? -குறைந்த அளவில் பால் கொள்முதல் செய்துவிட்டு விற்பனையை சமாளிப்பதற்காக வெளிமாநிலங்களிலிருந்து பால் பவுடர் வாங்கி அதனை கலந்து தயாரிக்கும்போது பாலின் தரம் என்னவாகும்?என புரட்சித்தாய் சின்னம்மா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை ஏன் குறைந்து கொண்டே வருகிறது?- புரட்சித்தலைவி அம்மா ஆட்சிகாலங்களில் 12,500 என்ற எண்ணிக்கையில் இருந்த கூட்டுறவு சங்கங்கள், இன்றைக்கு 9,189 சங்கங்களாக குறைந்துவிட்டது-  அதிலும் 3,000 முதல் 4,000 சங்கங்கள் மட்டும் தான் முறையான செயற்பாட்டில் இருப்பதாக தகவல் வருகிறது -தமிழக விவசாயிகள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று திமுகவினருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் இல்லை- அதேபோன்று பால் உற்பத்தியாளர்களுக்கு, கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவுக்கு கொள்முதல் நிலுவைத்தொகையை ஆவின் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது- ஆவினை விட கூடுதலான விலையில் தனியார் நிறுவனங்கள் பாலினை வாங்குகின்றன- இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தனியாருக்கு பாலினை விற்றுவிடுகின்றனர்- திமுக தலைமையிலான அரசு வெளி மாநிலத்திலிருந்து கூடுதலாக விலை கொடுத்து பால் பவுடர், வெண்ணை ஆகியவற்றை வாங்குவதற்கு பதிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்திக்கொடுப்பதன் மூலம் பால் கொள்முதலையும் அதிகரிக்கமுடியும்- ஆவின் நிறுவனத்தையும் லாபகரமாக கொண்டுசெல்லமுடியும்- எனவே, தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று, தனியார் பால் நிறுவனங்களை முன்னேற்றுவதுதான் திமுகவின் நோக்கமாக தெரிகிறது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைமையிலான அரசின்  நிர்வாகத்திறமையின்மையால், ஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது- 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஜீவாதாரமாக இருக்கக்கூடிய பால் வளத்துறைக்கு எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை- தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா, கிராமப்புற ஏழை எளிய பெண்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து மாடு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்- இதன் மூலம் எண்ணற்ற பசு‌க்க‌ளை மக்களுக்கு வழ‌ங்கி மாநிலத்தில் பால் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்கியத‌ன் மூல‌ம் தமிழகத்தில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர் புரட்சித்தலைவி அம்மா-இத்தகைய புரட்சிகர திட்டத்தையும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்திவிட்டது என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

திமுகவினர் மாடு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியிருந்தாலே இன்றைக்கு தமிழகத்தில் பால் உற்பத்தி மிக அதிக அளவில் பெருகியிருக்கும்-  ஆவின் நிறுவனமும், அதிக அளவில் பால் கொள்முதல் செய்திருக்க முடியும்- ஆவின் பால் விநியோகமும் சீராக இருந்திருக்கும்- ஆனால், இன்றைக்கு ஆவின் நிறுவனம் குறைந்த அளவில் பால் கொள்முதல் செய்வதால் மக்களுக்கு தேவையான அளவு பால் விற்பனை செய்ய முடியவில்லை- இதனால் மக்கள் கூடுதலாக செலவழித்து தனியார் பாலினை வாங்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்-இதன் காரணமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக 300 முதல் 400 ரூபாய் வரை செலவினம் அதிகரிக்கிறது என புரட்சித்தாய் சின்னம்மா புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே,  திமுகவினர் நாள்தோறும் கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடுவதை நிறுத்திவிட்டு தமிழக மக்களிடம் உண்மையாக நடந்துகொள்ளுங்கள் - திமுக தலைமையிலான அரசு பால் உற்பத்தியாளர்களின் வயிற்றில் அடிப்பதையும், தமிழக மக்களை ஏமாற்றுவதையும் விட்டுவிட்டு, ஆவின் நிறுவனம் அழிவு பாதைக்கு சென்று கொண்டிருப்பதை தடுத்துநிறுத்த வேண்டும் என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

Night
Day