எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு, கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
ஈக்குவார்பாளையம் மேல்பாக்கம் பகுதியில் காப்புக் காட்டுக்கு சொந்தமான இடத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி உதவியுடன் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்தனர். மேலும் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கலியன், 3 டிஎஸ்பிகள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். இதனிடையே, வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வரமறுத்து, கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
தொடர்ந்து மேல்பாக்கம் கும்மிடிப்பூண்டி சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இந்நிலையில் போலீசார் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறிய நிலையில் பொதுமக்களுடன், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் புத்தகங்களை ஏந்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் அமர்ந்து கொண்டு வரமறுத்த பெண்களை, போலீசார் தர தரவென இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றினர்.
மேலும் அப்பகுதியில் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்துள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தாங்கள் நெடுங்காலமாக குடியிருந்து வரும் வீடுகளை இடித்தால், தாங்கள் செல்வதற்கு வேறு இடம் இல்லை என்றும், சிறிய குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ இயலாமல் நிற்பதாகவும் பெண்கள் குமுறியது சோகத்தை ஏற்படுத்தியது.