எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை முல்லைநகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை கோரிய வழக்கில், ஆக்கிரமிப்பில் உள்ள கலைஞர் அறிவாலய கட்டிடத்தை முதலில் இடித்து அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை பி.பி.குளம் கண்மாயில் அதிகளவிற்கு ஆக்கிரமிப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வீடுகளை காலி செய்யுமாறு பொதுப்பணித் துறை ஒட்டிய நோட்டீஸிற்கு தடை விதிக்க கோரியும், அதேபோல் முல்லை நகர் பகுதியில் கலைஞர் அறிவாலய கட்டடத்தை இடிக்க கூடாது என்று கோரியும் தனித்தனியாக வெவ்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர், ஒரு அரசியல் கட்சி மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் நீர்நிலையை ஆக்கிரப்பு செய்து அலுவலகம் கட்டி வைத்துக் கொண்டு, அதை இடிப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறினர்.
முதலில் அந்த அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டபோது குறுக்கிட்ட நீதிபதிகள், கலைஞர் அறிவாலய கட்டிடத்தை இடிப்பதாக உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்யுமாறும், 2 வாரங்களுக்குள் கட்டிடம் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இது சம்பந்தமான அறிக்கையை டிசம்பர் 6ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், அங்கு குடியிருப்பவர்களுக்கான மறுவாழ்வு அளிப்பதற்கான அரசின் திட்டங்கள் என்ன என்பது குறித்தும் வீட்டு வசதி வாரியத்திடம் விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்போகிறீர்கள் என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.