எழுத்தின் அளவு: அ+ அ- அ
திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தும் பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு முறை வெளியிட்டு அதனை நீக்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே மதுவிலக்கு மாநாட்டில் பங்கேற்க எதிர்கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாக திமுகவுக்கும் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. இந்நிலையில் திடீரென, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தும் பழைய வீடியோ ஒன்றை தொல்.திருமாவளவன் தற்போது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், எதிர்த்துப் பேசக்கூடாது, போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிடக் கூடாது, உயர்ந்த தகுதிக்கு வர ஆசைப்படக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக்கூடாது என்றும், தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் பேசியுள்ளார்.
அமைச்சரவையில் பங்கு வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும், என இதற்கு முன்பு கூட்டணிக் கட்சிகள் இதனை கோரினார்களா என்று தெரியவில்லை. அதிகாரத்தில் பங்கு வேறு, தொகுதிப் பங்கு வேறு என்றும், 1999ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தலில் அடியெடுத்து வைத்த போது வைத்த முதல் கோரிக்கை, ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என குறிப்பிட்டிருந்தது வீடியோவில் வெளியாகியுள்ளது.
கடைசி மனிதனுக்கும் சனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என்று பேசும் வீடியோவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த வீடியோவை முதலில் தொல்.திருமாவளவன் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். பிறகு அதனை நீக்கிவிட்டார். மீண்டும் அதனை பதிவிட்டு இரண்டாம் முறையும் அதனை நீக்கியுள்ளார்.
ஆட்சியில் பங்கு கேட்கும் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளதால், திமுக கூட்டணியில் பிளவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியாகி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், தனது அட்மினுக்குதான் தெரியும் என தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.