எழுத்தின் அளவு: அ+ அ- அ
புதிய ஒப்பந்தம் போட முன்வராத விசைத்தறி உரிமையாளர்களை கண்டித்து 8வது நாளாக தொடரும் தொழிலாளர்களின் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு 30 லட்ச ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி 8ஆவது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கும் - உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட இரண்டு ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம், கடந்த 31ஆம் தேதியோடு முடிவடைந்தது. உரிமையாளர்கள் புதிய ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தைக்கு முன்வராததையடுத்து, 50 சதவீத கூலி உயர்வு, 20 சதவீத போனஸ் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் 8வது நாளான இன்று சட்டையில் கருப்பு பட்டை அணிந்தும், கருப்பு கொடிகளை அந்தப் பகுதி முழுவதும் கட்டியும், மாணிக்கசாமி கோவில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், நாள் ஒன்றுக்கு 30 லட்ச ரூபாய் மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.