எழுத்தின் அளவு: அ+ அ- அ
கொடைக்கானல் அருகே கியர் ராடு உடைந்தும் நிறுத்தப்படாமல் இயக்கப்பட்ட அரசு பேருந்து. கியர் ராடை கையில் பிடித்தவாறு, உயிரை பணயம் வைத்து, பேருந்தில் பயணித்த பயணிகள். அரசு பேருந்துகளின் அவல நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல், கோடை விடுமுறைக்கு பிரபலமான கோடை வாசஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரத்து 200 அடிக்கு மேல் உயரம் கொண்ட கொடைக்கானலை சுற்றிலும், பல்வேறு மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இங்குள்ள ஒருசில கீழ்மலை கிராமங்களுக்கு செல்ல கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மலைச் சாலையில் பயணிக்கும், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள், நன்கு பராமரிப்புடனும், கவனமுடன் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கொடைக்கானலுக்கு உட்பட்ட மலைகிராமங்களில், பராமரிப்பின்றி தரமற்ற அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காடு கிராமத்திற்கு வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து பெரும்பாறை, தாண்டிக்குடி வழித்தடத்தில், 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
மலைச்சாலையில் பேருந்தினை ஓட்டுனர் இயக்கி கொண்டிருந்த போது கியர் மாற்றும் ராடின் கம்பி, இணைப்பு கம்பியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அசாம்பவிதம் நடைபெறாத வண்ணம் பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கியர் மாற்றும் கம்பியை கையில் பிடித்தவாறு, பேருந்தில் பயணம் செய்யும் காட்சிகளை நம்மால் காண முடிந்தது.
கியர் ராடை கையில் பிடித்தவாறு, உயிரை பணயம் வைத்து, பேருந்தில் பயணிப்பதாக பயணிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பயணி ஒருவர் கியர் மாற்றும் கம்பியை கையில் பிடித்தவாறு, பேருந்தில் பயணம் செய்யும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைகிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளை நன்கு பராமரித்து, விபத்துகள் ஏற்படா வண்ணம் தரமான பேருந்துகளை இயக்க, திண்டுக்கல் அரசுப் போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.