ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பன்மடங்கு அதிகரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பதால், கட்டணக் கொள்ளையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

சென்னையில் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அதிலும் பெரும்பாலான மக்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து பணிக்காகும், படிப்பிற்காகவும் சென்னையில் தங்கி தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில்களில் முன்பதிவு தொடங்கி விடும். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் பெரும்பாலான மக்கள் பேருந்துகளிலே பயணம் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் கடந்த சில ஆண்டுகளாகவே கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, சாதாரண நாட்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை இருக்கும் ஆனால் பண்டிகை நாட்களில் அவை இருமடங்காக அதிகரிப்பது வாடிக்கையாகி வருகிறது. இது தொடர்பாக அரசு பல்வேறு எச்சரிக்கை விடுத்தாலும், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தி வருவதால் பொதுமக்களும், சாமானியர்களும் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பல மடங்கு கட்டணம் உயர்ந்திருப்பது பயணிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, ஜெயா பிளஸ் தொலைக்காட்சி சார்பாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கடந்த காலங்களில் மேற்கொண்டவர்களின் கட்டண விவரமும், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய இரண்டு நாட்களின் கட்டண விவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது.

1.சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ஏ.சி.ஸ்லீப்பர் பேருந்துகளில் ஆயிரத்து 300 முதல் 2 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

2.இதேபோல், ஏ.சி.செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் சாதாரண நாட்களில் 600 முதல் 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தீபாவளி நாட்களில் ஆயிரத்து 700 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

3. ஏ.சி.அல்லாத சாதாரண பேருந்துகளில் 600 முதல் ஆயிரத்து 100 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தீபாவளியையொட்டி ஆயிரத்து 700 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

4.சென்னையில் இருந்து நெல்லைக்கு சாதாரண நாட்களில் ஏ.சி.ஸ்லீப்பர் பேருந்துகளில் குறைந்த பட்சம் ஆயிரத்து 600 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 ஆயிரத்து 100 முதல் 4 ஆயிரத்து 300 வரை கட்டணம் அதிகரித்துள்ளது

5.ஏ.சி.செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் ஆயிரத்து 300 ரூபாய் கட்டணமாக இருந்த நிலையில், தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

6.ஏ.சி.அல்லாத சாதாரண பேருந்துகளில் ஆயிரத்து 200 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.

7.இதே போல், சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ஏ.சி.ஸ்லீப்பர் பேருந்துகளில் 900 முதல் ஆயிரத்து 700 வரை கட்டணமாக இருந்த நிலையில், 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது

8. ஏ.சி.செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் 799 முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தற்போது ஆயிரத்து 900 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது

9. ஏ.சி.அல்லாத சாதாரண பேருந்துகளில் 700 முதல் ஆயிரத்து 200 வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில்,  தீபாவளி நாட்களில் ஆயிரத்து 600 முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது

10. சென்னையிலிருந்து கோவை செல்லக்கூடிய ஏ.சி.ஸ்லீப்பர் பேருந்துகளில் 1000 முதல் 2000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்பட்டது. தற்போது, குறைந்த பட்சம் 2 ஆயிரத்து 300 முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது 

11. ஏ.சி.செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் 700 முதல் 1000 ரூபாய் வரை கட்டணமாக இருந்த நிலையில், தீபாவளியையொட்டி ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 200 வரை கட்டணம் உயர்ந்துள்ளது

12. ஏ.சி.அல்லாத சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்சம் 700 முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை டிக்கெட் விலை இருந்த நிலையில், தீபாவளி நெருங்குவதால் ஆயிரத்து 700 முதல் 3 ஆயிரம் வரை டிக்கெட் விலை அதிகரித்துள்ளது.

இப்படி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் என பிற மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும், 1000 ரூபாய் முதல் ஆயிரத்து 300 ரூபாய் வரை இரண்டு மடங்காக கட்டணம் அதிகரித்து இருப்பது, சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருக்கும் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு பண்டிகை நாட்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்கவும், ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளையை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day