எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆம்னி பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கப்பட வேண்டும் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்த நிலையில், கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
சென்னை கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், முழுமையான ஏற்பாடுகளின்றி அவசர கதியில் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கெனவே, தென் தமிழகத்திற்கு செல்லும் அரசுப்பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில், இன்று முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆயிரத்து 300 ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கான வசதி உள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளனர். முறையான ஏற்பாடு இல்லாமல் கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என அறிவிப்பது ஏற்புடையது அல்ல என தெரிவித்துள்ள ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், மக்கள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.