எழுத்தின் அளவு: அ+ அ- அ
திராவிட இயக்க வரலாற்றில் முதுபெரும் தலைவராக திகழ்ந்த ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், திராவிட இயக்க வரலாற்றில் முதுபெரும் தலைவராக விளங்கியவரும், புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருடன் இணைந்து இயக்கத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றியவருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
ஆர்.எம்.வீரப்பன், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோருடன் அரசியலில் இணைந்து பயணித்த பெருமைக்குரியவர் - புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு இயக்கத்திலிருந்து விலகி சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கு தாங்கள் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பயனாக, 1991ஆம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பன், புரட்சித்தலைவி அம்மாவுடன் இணைந்த அந்த தருணத்தை இந்நேரத்தில் பெருமிதத்துடன் எண்ணிப் பார்ப்பதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
முதுபெரும் தலைவர் ஆர்.எம்.வீரப்பனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திராவிட இயக்க பற்றாளர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.