எழுத்தின் அளவு: அ+ அ- அ
2025 ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் உரையாற்ற வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திடீரென அவையில் உரையாற்றாமல் புறப்பட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து நான்காவது ஆண்டாக இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் உரையுடன், 2025 ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவை தொடங்கும் முன்பும் முடிவடைந்த பின்பும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என ஆளுநர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று கூட்டம் தொடங்கிய போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்பதே ஆளுநரின் நிலைப்பாடாக இருந்தது.
ஆனால் இன்று சட்டப்பேரவை தொடங்கியதும் தமிழ்த் தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டதால் அதிருப்தி அடைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் பாட கோரிக்கை விடுத்தும் சபாநாயகர் அமைதி காத்ததால், தமிழ்த் தாய் வாழ்த்து நிறைவடைந்ததும் அவையை விட்டு வெளியேறினார்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரைக்கு முன்பும், பின்பும் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு என்றும், தமிழக சட்டப்பேரவையில், தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டதால் ஆளுநர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் அவமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்றும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.