எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் படிக்கட்டு இல்லா அரசு பேருந்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் திகில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... நெல்லை போக்குவரத்து துறையின் அவல நிலையை விரிவாக பார்க்கலாம்...
படிக்கட்டு இல்லா அரசு பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் பயணம் செய்யும் காட்சிகள் தான் இவை...
கடந்த மூன்று தினங்களுக்கு முன் சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென இருக்கையின் கீழே இருந்த பலகை உடைந்து ஒரு பெரிய ஓட்டை உருவானது. அப்போது அதன் வழியே பெண் பயணி ஒருவர் கீழே விழுந்தார். முழுதாக கீழே விழாமல் பேருந்தில் பெண் சிக்கிக்கொண்டார். பெண் பயணி விழுந்தது தெரியாமல் பேருந்து சிறிது தூரம் சென்றது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். அதை தொடர்ந்து தற்போது, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் படிக்கட்டு இல்லா அரசு பேருந்தில் பொதுமக்கள் உயிருக்கு ஆபாத்தான நிலையில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது...
மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது. 50 பயணிகள் செல்ல வேண்டிய பேருந்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிற்க கூட இடமில்லாமல் நெருக்கடியுடன் பயணம் செய்தனர்.
இந்த அரசு பேருந்தில் இன்று பின்பக்கம் படிக்கட்டு இல்லாமல் காணப்பட்டது... பின்பக்கம் படிக்கட்டு இல்லாமல் இருந்ததால், பயணிகள் மிகவும் சிரமத்துடன் ஏறி ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தனா்...
மேலும் பெண்கள் முதியோர்கள் உள்ளிட்ட அனைவரும் முன்பக்க வாசல் வழியே ஏறி இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், பேருந்து உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்...
ஏற்கனவே நெல்லை மண்டலப் போக்குவரத்தில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது படிக்கட்டு இல்லாத பேருந்தை இயக்குவது, போக்குவரத்து துறையின் அவல நிலையை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்...
இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தரமான பேருந்துகளை இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்...