எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படும் சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி விடுதியில், மாணவர்கள் உயிர் பயத்தில் கல்வி கற்கும் அபாயம் நிலவுகிறது. தரமற்ற உணவு, சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் துர்நாற்றம் வீசும் கழிவறைகளால் மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. விடுதியை சீரமைக்க மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழக அரசின் உயர்கல்வி துறையின் கீழ் இயங்கி வருவதுதான் தரமணி பாலிடெக்னிக் கல்லூரி.. இங்கு தமிழகத்திலிருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். நெசவு தொழில்நுட்பம், மாநில வணிக கல்வி பயிலகம், தோல் தொழில்நுட்ப பயிலகம், வேதியல் தொழில்நுட்ப பயிலகம் மற்றும் அச்சு தொழில் நுட்ப பயிலகம் உள்ளிட்ட ஐந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், தரமணியில் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
வெளி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர், வெளியில் தங்க வசதி இல்லாமல் உயர்கல்வி துறை சார்பாக கட்டப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விடுதியில் தங்கியுள்ளனர். இந்த விடுதி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காரணத்தினால் முறையாக பராமரிப்பின்றி உள்ளே செல்லக்கூடிய சுற்று வட்டார பகுதி முழுவதும் கழிவு நீரால் சூழ்ந்துள்ளது.
விடுதி கட்டிடத்தின் சுவர்கள் உடைந்து, ஆங்காங்கே விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் செல்லக்கூடிய அவல நிலையில் காட்சியளிக்கிறது.
குறிப்பாக மழைக்காலங்களில் மாணவர்கள் தங்கும் அறைக்குள் தண்ணீர் வருவது மட்டுமின்றி, விடுதி அறையில் உள்ள சுவர்கள் எந்த நேரத்திலும் விழும் அபாயத்துடன் இருப்பதால், தூங்காமல் வெளியே செல்லக்கூடிய அவல நிலை ஏற்படுவதாக விடுதி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாணவர்கள் சேர்க்கையின்போது விடுதியின் முன்வைப்புத் தொகையாக பத்தாயிரம் ரூபாயும், மாதம் தோறும் உணவிற்காக 2 ஆயிரத்து 500 ரூபாயும் வாங்கப்படும் நிலையில், முறையான அடிப்படை வசதிகள் இல்லாமல் விடுதியின் குளியலறை, கழிவறை உள்ளிட்டவை துர்நாற்றம் வீசுவதால், உடல் நலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதாக மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
உணவில் பூச்சிகள், தவளை, பல்லி உள்ளிட்டவை இருப்பதாகவும் இது தொடர்பாக விடுதியில் உள்ள வார்டனிடம் முறையிட்டால் அவர் தகுந்த பதில் அளிக்காமல் அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டுகின்றனர் மாணவர்கள்.
பாலிடெக்னிக் கல்லூரியின் அவலம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் மாற்று சான்றிதழ் கொடுத்து வெளியே அனுப்பி விடுவோம் என நிர்வாகத்தினர் மிரட்டுவதாக மாணவர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்லூரியின் விடுதிகள் முறையாக செயல்பட்டாலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதி தினந்தோறும் மரண பயத்தை தருவதாக மாணவர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
பராமரிப்பின்றி காணப்படும் சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி விடுதியை விளம்பர திமுக அரசு சீரமைத்து விடுதி மாணவர்களின் கல்வி கனவை நனவாக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.