இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜின் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், மறைந்த நடிகருமான மனோஜின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி ராஜா சென்னை நீலாங்கரை இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மனோஜ் உடலுக்கு கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, பாண்டியராஜன், பேரரசு, தியாகராஜன், விக்ரமன், எழில் உள்ளிட்ட இயக்குநர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் விஜய்சேதுபதி, சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சரத்குமார், நாசர், கவுண்டமணி, செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ரோபோ சங்கர், பிரேம் குமார், பார்த்திபன், ஸ்நேகன் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் தேவயானி, ராதிகா சரத்குமார், நமீதா, உள்ளிட்ட நடிகைகளும் அஞ்சலி செலுத்தினர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

தனது மகன் மனோஜ்பாரதி உடலுக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா கண்ணீர் மல்க இறுதிச்சடங்குகளை நிறைவு செய்தார். பின்னர் அவரது மனோஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்ற அமரர் ஊர்தியில் மனோஜ் நடித்த தாஜ்மஹால் உள்ளிட்ட படங்களின் பாடல்கள் இசைக்கப்பட்டன. 

இதனைதொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு மனோஜின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகளை இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் மற்றும் மறைந்த மனோஜ் பாரதியின் மகள்கள் செய்தனர். ஆழ்ந்த சோகத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த பாரதிராஜாவை அவரது உறவினர்கள் நாற்காலியுடன் தூக்கிச் சென்று இறுதி சடங்குகளை செய்ய வைத்தனர். 

இறுதி சடங்கில் இயக்குநர் பாக்கியராஜ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மனோஜுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதனைதொடர்ந்து மனோஜின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 


Night
Day