எழுத்தின் அளவு: அ+ அ- அ
திரைப்பட இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை உரிமம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் இயக்குநர் ஷங்கருக்கு சொந்தமான சுமார் பத்து கோடிக்கும் அதிக மதிப்புள்ள மூன்று அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை என உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஷங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், கதைக்காக மட்டும் 11 கோடியே ஐம்பது லட்சம் ரூபாயை பெறாத நிலையில் சொத்துக்களை எப்படி முடக்க முடியும் எனவும் ஷங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து, தனிநீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் புகாரின் இறுதி முடிவுக்கு காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன் என அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
தொடர்ந்து, சொத்துக்களை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்கால தடைவிதித்த உயர்நீதிமன்றம், ஷங்கரின் மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.