இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு - புரட்சித்தாய் சின்னம்மா வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த விசைப்படகு கடலில் மூழ்கியதில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்தினருக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கலும் அனுதாபமும் தெரிவித்துள்ளார். மேலும், காணாமல் போன மீனவரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி, ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள்  சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியதில், மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்திருப்பதாக வரும் செய்திகள் மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த படகில் சென்ற 2 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் கடலில் மூழ்கி விட்டதாகவும், அவர் உயிருடன் இருக்கிறாரா? என்ற தகவலும் இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது மிகவும் வேதனையளிக்கிறது - உயிரிழந்த மலைச்சாமியின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து, கடந்த ஜூன் 15ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வரும் நிலையில், இந்த ஒன்றரை மாதத்தில் மட்டும், இலங்கை கடற்படையினரால் 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள்  சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்களின் 14 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் வருகின்றன - இந்நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது,நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல் மோதியதில், தமிழக மீனவர்களின் படகு மூழ்கியதாக செய்திகள் வருகின்றன - இந்த படகில் சென்ற மலைச்சாமி உயிரிழந்திருப்பதாகவும், மற்றொருவர் கடலில் மூழ்கி இதுவரை கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வருவது மிகவும் வேதனையளிக்கிறது - இலங்கை கடற்படையினர் வேண்டுமென்றே இதனை செய்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர் என, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இலங்கை கடற்படையினரால் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 620க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - அதாவது, கடந்த 2022-ம் ஆண்டில் 36 தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், 264 மீனவர்களை கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன - அதேபோன்று 2023-ம் ஆண்டில் 35 மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்ததோடு, 240 மீனவர்களை கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன - இந்நிலையில் இந்த ஆண்டும் 120க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருவது மிகவும் வேதனையளிக்கிறது - இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இன்னலுக்கு ஆளாகி வருவது மிகவும் கவலை அளிக்கிறது - புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்த தமிழக மீனவர்கள் மத்திய அரசின் உதவியோடு விரைந்து விடுவிக்கப்பட்டனர் - எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழக மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் உயிரிழந்த தமிழக மீனவர் மலைச்சாமியின் உடலை உடனே தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மேலும், காணாமல் போன மீனவரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

Night
Day