எழுத்தின் அளவு: அ+ அ- அ
முல்லைத் தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயமடைந்தனர். அத்துடன் 13 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள், 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடந்த 26ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். முல்லைத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இரு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளை சுற்றிவளைத்தனர். இதனைக் கண்டு விசைப் படகுகளுடன் மற்ற மீனவர்கள் தப்பியோடிய நிலையில், காரைக்காலை அடுத்த கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பதற்கு சொந்தமான படகை மட்டும் இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், படகில் இருந்த 2 மீனவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்த இரு மீனவர்கள் உட்பட 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
யாழ்ப்பாணம் மருத்துவனையில் காயமடைந்த இரு மீனவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மற்ற மீனவர்ளை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் திருகோணமலை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர் படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் கிளிஞ்சல் மேடு மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்து கதறி அழுத மீனவப் பெண்கள், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை தீவிரவாதிகள் போல் சுட்டுப் பிடித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய மீனவ பெண்கள், இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கதறி அழுதனர்.
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கண்டித்தும், மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் ஏராளமான மீனவ மக்கள் கிளிஞ்சல் மேடு மீனவர் குவிந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.