இளையராஜாவிடம் ஒரு மணி நேரம் குறுக்கு விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

 தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு மணி நேரத்துக்கும் மேல் சாட்சியம் அளித்தார்.

தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம், தங்கள் அனுமதியின்றி இந்த படங்களின் பாடல்களை யு டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி 2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி பி.இளங்கோ முன்பு இளையராஜா ஆஜரானார். அவரிடம் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். அதற்கு சாட்சி கூண்டில் ஏறி இளையராஜா பதிலளித்தார்.

அவரிடம் பாடல்களின் பதிப்புரிமை பற்றியும், தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாகவும், சொத்து மதிப்புகள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டன. குறுக்கு விசாரணையின் போது எத்தனை பங்களாக்கள் உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த இளையராஜா, தனக்கு முழு ஈடுபாடும் இசையில் உள்ளதால், உலகளாவிய பொருட்களை பற்றி தெரியாது என கூறியுள்ளார்.

பேர், புகழ், செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது உண்மையா என்ற கேள்விக்கு, அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது என இளையராஜா பதிலளித்தார். இளையராஜாவிடம் ஒரு மணி நேரம் நடந்த சாட்சி விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, நீதிபதி, மீண்டும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி உத்தரவிட்டார்.

Night
Day