எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 11 மணி நேர நிலவரப்படி 26.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி, சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் களம் காண்கின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், 37 பிற பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் காலை 11 மணி நேர நிலவரப்படி 26.30 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அவர்கள் வாக்களிக்கும் வசதியாக 53 இடங்களில் 237 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 9 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க 300 துணை ராணுவம் மற்றும் 2 ஆயிரத்து 600 காவல்துறையினர் உட்பட சுமார் 3 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.