எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மழைக்காலம் வந்துவிட்டாலே பல்வேறு விதமான காய்ச்சல்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக டெங்கு, மலேரியா, டைபாஃய்டு உள்ளிட்ட பல காய்ச்சல்கள் மக்களை அச்சுறுத்தும். ஆனால், தற்போது 'லெப்டோஸ்பைரோசிஸ்' (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சலும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், ஈரோட்டில் வடமாநில தொழிலாளர்கள் இருவருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பூனாட்சி பகுதியில் செயல்படும், தனியார் தொழிற்சாலை கட்டுமான பணியில், வடமாநில தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பணிபுரிந்து வரும் 5 தொழிலாளர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிபின் குமார், பரனித்தர் ஆகிய இருவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அன்மோல் என்பவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மற்ற 2 பேருக்கு சாதாரண காய்ச்சல் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, 5 பேரும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அங்கு எலிக்காய்ச்சல் இருவருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் பகுதியில் மருத்துவக்குழுவினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு எலிக்காய்ச்சலால் ஏற்கனவே ஒரு சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு பெண்மணி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, மொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறதா என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
"லெப்டோஸ்பைரா" எனும் பாக்டீரியா கிருமிகளின் பாதிப்பால் எலிக்காய்ச்சல் ஏற்படுவதாகவும், இந்தக் கிருமிகள் எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் பரவுவதுதான் அதிகம் என்றாலும், ஆடு, மாடு, நாய், பூனை, பன்றி, குதிரை போன்ற பல விலங்குகளிடமும் இந்தக் கிருமிகள் காணப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எலிகாய்ச்சல் வந்தால் கடும் குளிர், தலைவலி, கண்கள் சிவப்பது, தாங்க முடியாத தசைவலி, உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும் என்றும், குறிப்பாக கண்கள் சிவப்பது முக்கிய அறிகுறி என்று கூறும் மருத்துவர்கள், நோயின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வந்துவிட்டால் இதை குணப்படுத்திவிடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
எலி காய்ச்சல் வராமல் தடுக்க பருவமழை தொடங்கும் முன்பே, மாநில சுகாதாரத் துறையினர் பொதுமக்களுக்குத் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் ஆறுகள், ஏரிகள், குளங்களில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், தூர் வாருவதும் முக்கியம் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், தெருக்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை சுத்தப்படுத்தி, மழைக்காலத்தில் அவை அடைத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக டெங்கு பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், எலிக்காய்ச்சலும் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.