எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி., எம். செல்வராஜ் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 67.
நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி செல்வராஜ், நுரையீரல் தொற்று பிரச்னை காரணமாக, கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காலமானார். செல்வராஜின் மறைவு அக்கட்சி தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு கமலவதனம் என்ற மனைவியும், செல்வபிரியா, தர்ஷினி என்ற மகள்களும் உள்ளனர். எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. அவருடைய மறைவுக்கு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துவதாகவும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
மறைந்த எம்.பி. செல்வராஜின் இறுதிச் சடங்கு அவருடைய சொந்த கிராமமான திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ள செல்வராஜ், 1989ம் ஆண்டு முதல் நாகை மக்களவை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 7 முறை தொடர்ச்சியாக போட்டியிட்டுள்ளார். அதில், நான்கு முறை எம்பியாக தேர்ந்தேடுக்கப்பட்டார்.