அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மாறான கருத்துக்களை, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் வாய்க்கு வந்தபடி பேசி, மக்களை ஏமாற்ற நினைப்பதற்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஒவ்வொருநாளும் பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது என தெரிவித்துள்ளார். அந்த வரிசையில் தற்போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஒரு வடிகட்டிய பொய்யை பேசியிருக்கிறார் - அதாவது, அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மாறான கருத்துக்களை, வாய்க்கு வந்தபடி பேசி, மக்களை ஏமாற்ற நினைப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் ஒன்றேமுக்கால் கோடி பயணிகள் பேருந்துகளில் பயணிக்கும் நிலையில், மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 900 தான் உள்ளது - இது எந்தவிதத்தில் போதுமானதாக இருக்கும் என்று தெரியவில்லை என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். தான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் மக்களை சந்தித்தபோது, திமுக தலைமையிலான அரசு, புதிய பேருந்துகளை இதுவரை ஏன் வாங்கவில்லை? என்று கேள்வி எழுப்பினேன் - அதன்பிறகுதான் சுமார் 100 முதல் 150 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டன - திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றப்பிறகு 2022-2023ஆம் நிதியாண்டில் ஆயிரம் புதிய பேருந்துகள், 2023-2024ஆம் நிதியாண்டில் ஆயிரம் புதிய பேருந்துகள், 2024-2025ஆம் நிதியாண்டில் 3 ஆயிரம் பேருந்துகள், ஜெர்மன் வளா்ச்சி வங்கி உதவியுடன் 2 ஆயிரத்து 666 புதிய பேருந்துகள் என மொத்தம் 7,682 புதிய பேருந்துகளை வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துறை அமைச்சர் வாய் கிழிய பேசினார் - ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பேருந்துகள் வாங்கி இருந்தால் கூட, நான்கு ஆண்டுகளில் இந்நேரம் 4000 பேருந்துகளாவது கொள்முதல் செய்திருக்க முடியும் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். ஆனால், உண்மை என்னவென்றால் தற்போதுவரை கிட்டத்தட்ட ஆயிரத்து 783 புதிய பேருந்துகள்தான் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன - புரட்சித்தலைவி அம்மா 2011ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் 10 வருடங்களில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்து 445 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன - ஆனால் திமுக அமைச்சரோ இவற்றையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு உண்மைக்கு மாறான தகவல்களை பேசி மக்களை ஏமாற்ற பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான அரசு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதை தவிர்ப்பதற்காகவே, புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் நடைமுறையில் இருந்துவந்த, வயது முதிர்ந்த பேருந்துகளை கழிவு செய்தல்கொள்கையினை, 08-07-2021ஆம் தேதியன்று திமுக அரசு திருத்தியது - அதாவது விரைவு பேருந்துகளுக்கு 3 வருடம் அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் என்று இருந்த கழிவு செய்தல் கொள்கையினை, 9 வருடம் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் என்று திருத்தியது - அதேபோன்று மாவட்ட பேருந்துகளுக்கு 6 வருடம் அல்லது 7 லட்சம் கிலோமீட்டர் என்று இருந்த கழிவு செய்தல் கொள்கையினை, 9 வருடம் அல்லது 12 லட்சம் கிலோமீட்டர் என்று திமுக அரசு திருத்தியது - இதனடிப்படையில் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யாமல், பழைய பேருந்துகளை கொண்டே இயக்கப்பட்டதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இதில் கொடுமை என்னவென்றால், பழைய பேருந்துகளை சரியாக பராமரிப்பதும் இல்லை - அவை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன - இன்றைக்கு 50 சதவிகித பேருந்துகள் பராமரிக்க முடியாத வகையில், அதன் ஆயுட்காலமே முடிந்து காலாவதியாகியிருப்பதுதான் உண்மை - இதன் காரணமாக, தமிழகத்தில் பல இடங்களில் அரசு பேருந்துகள் சாலையின் நடுவிலேயே பழுதடைந்து நிற்பதும், விபத்துக்கு உள்ளாவதும் அன்றாடம் நடைபெற்று வருவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். சென்னை மாநகரிலேயே பேருந்தில் ஓட்டை ஏற்பட்டு பயணி சாலையில் விழுந்து காயமடைந்தது, அரசு பேருந்தின் மேற்கூரை தனியாக கழன்று காற்றில் பறந்தது, திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டது, பல இடங்களில் பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, நகர பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நிற்பது போன்ற அவலநிலை தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அரங்கேறிவருகின்றன - தமிழக மக்கள் தங்களது உயிரை பணயம் வைத்து அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிராமப்புறங்களில் பல ஊர்களுக்கு முறையாக அரசு பேருந்துகள் இயங்குவதில்லை - இதன் காரணமாக பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பிள்ளைகள் முதல் வேலைக்கு செல்லும் சாமானிய மக்கள் வரை பேருந்து வசதி இல்லாமல் நடந்தே செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்கள் வெற்று அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்? என புரட்சித்தாய் சின்னம்மா கேள்வி எழுப்பியுள்ளார். மகளிருக்கு இலவச பேருந்து என்று அறிவித்துவிட்டு, குறிப்பிட்ட இலவச பிங்க் நிற பேருந்துகள் ஓடுவதே இல்லை - இலவச பேருந்துகளுக்காக மகளிர் காத்திருந்து ஏமாற்றம் அடைவதுதான் மிச்சம் - அப்படியே வந்தாலும் அதில் பயணம் செய்யும் மகளிரை மிகவும் மோசமாக இழிவுபடுத்துகிறீர்கள் என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் சாலைகள் மிகவும் மோசமடைந்துவிட்டன - கிராமப்புறங்களில் இன்னும் தார் சாலைகள் முழுமையாக போடப்படவில்லை - சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை - ஒரு ஐந்து வருடத்திற்கு, ஒருமுறையாவது சாலைகள் போடப்படவேண்டும் - கிராமப்புறங்களில் சாலை போடுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு மட்டும் வருகிறது - திமுக தலைமையிலான அரசு ஆட்சிப்பொறுப்பேற்றபிறகு இதுவரை எத்தனை கிலோமீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன? என்று எந்த புள்ளிவிபரமும் இல்லை - இன்றைக்கும் கிராமப்புற பகுதிகளில் பல இடங்களில் பிரதான சாலைகளே குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன என புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக தலைமையிலான அரசின் ஆயுட்காலம் ஒவ்வொரு நாளும் எண்ணப்பட்டுவருகின்றன என்றும், திமுகவினரின் பகல்வேஷம் கலையும் நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, தமிழக மக்கள், வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான இந்த விளம்பர அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டார்கள் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.