உதகையில் கட்டிடம் இடிந்து விழுந்து 6 பெண்கள் உயிரிழப்பு : புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம், உதகையில், கட்டுமானப் பணியின்போது, கட்டிடம் இடிந்து விழுந்து 6 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். விபத்து நிகழ்ந்த பகுதி ஏற்கெனவே மண்சரிவு ஏற்படக்‍கூடிய பகுதியாக இருப்பதால், கட்டிடம் கட்ட முறைகேடாக அனுமதி அளித்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்‍கை எடுக்‍கவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். 

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்‍ஸ் வலைதளப் பதிவில், நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள லவ்டேல் பகுதியில் கட்டுமானப் பணியின் போது, கட்டிடம் இடிந்து விழுந்து 6 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் தடுப்பு சுவர் கட்டும் பணியில் கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அருகில் இருந்த கழிப்பிடம் இடிந்து விழுந்ததாகவும், இதில், சங்கீதா, ஷகீலா, பாக்யா, உமா, முத்துலட்சுமி, ராதா ஆகிய 6 பெண்கள் மண்ணில் புதைந்து உயிரிழந்ததாகவும் தெரிய வருகிறது - இதில் ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன - மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தொழிலாளர்கள் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

உதகையில் விபத்து நிகழ்ந்த இந்தப் பகுதி ஏற்கனவே மண் சரிவு ஏற்படக் கூடிய பகுதியாக இருப்பதாகவும், இந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு எவ்வாறு திமுக தலைமையிலான அரசு அனுமதியளித்தது? என்றும் இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் - மேலும், இந்த கட்டிடம் கட்ட முறைகேடாக அனுமதியளித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் -

உதகை போன்ற மலைப் பிரதேசங்களில் கட்டிடப் பணிகளை முறையாக அனுமதி பெற்று செய்கின்றனரா? - கட்டுமான பணியின் போது தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா? என்பதை திமுக தலைமையிலான அரசு எந்த விதத்தில் கண்காணித்து வருகிறது? என்று தெரியவில்லை - அதேபோன்று, இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் எத்தனை தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்? என்ற விபரமும் இதுவரை சரியாக தெரிவிக்கவில்லை - மேலும், இதில் வேறு யாரேனும் சிக்கி இருக்கின்றனரா? என்பதை உடனே கண்டறிந்து, மீட்புப் பணிகளை விரைந்து செய்திட தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.  

உதகையில் கட்டிட பணியின் போது உயிரிழந்த 6 பெண்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய சக தொழிலாளர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

Night
Day