எழுத்தின் அளவு: அ+ அ- அ
உதகையில் வீட்டின் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் பிஜ்ஜால் என்பவரது வீடுகட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த கட்டிடத்தை ஒட்டி பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் ஒன்று இருந்தது. இந்நிலையில் இன்று கட்டிடத்தை ஒட்டி தடுப்புச்சுவர் கட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது குடியிருப்பு பகுதியை சுற்றி 15 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் போது, திடீரென கழிப்பிடத்தின் கட்டிடம் இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். அவர்களது அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் மீட்டனர். இந்த விபத்தில் சங்கீதா, ஷகிலா, பாக்யா, உமா, முத்துலட்சுமி மற்றும் ராதா ஆகிய 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீசர் விசாரணை நடத்திவரும் நிலையில், உதகையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், சம்பந்தப்பட்ட கட்டுமான பணியின் உரிமையாளரை கைதுசெய்ய வலியுறுத்தியும் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.