எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்த சில மணி நேரத்திலேயே சந்தி சிரித்தது.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தின் முதலாவது மாடி மேற்கூரை கான்கிரீட் கீழே விழுந்த சம்பவம் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன...
நெல்லை மக்களின் முக்கிய தேவையான பேருந்து நிலைய கட்டுமான பணிகள், ஆமை வேகத்தில் நடைபெற்றதால் பொதுமக்களும், வியாபாரிகளும் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்...
இதனிடையே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமான பணிகளுக்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை என்பதும் அம்பலம் ஆனது...
DTCP, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட ஏழு துறைகளின் அனுமதியை பெறாமலேயே ஆறு ஆண்டுகளாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது அம்பலமான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன...
இந்நிலையில் எவ்வித அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்...
பேருந்து நிலையத்தை திறந்த சில மணி நேரத்திலேயே, அதன் முதல் மாடி மேல் கூரை கான்கிரீட் திடீரென கீழே விழுந்து சேதமடைந்ததால் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்...
பேருந்து நிலைய கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே சந்தி சிரித்த நிலையில், அசம்பாவிதம் நிகழ்ந்தால் அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்பாரா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்...
தரமற்ற பேருந்து நிலைய கட்டடம் திறந்து வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்...
இதனிடையே பேருந்து நிலைய கட்டடத்தை திறந்து வைக்க வந்திருந்த அமைச்சர் உதயநிதியை முற்றுகையிட்ட பெண்கள், தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளே செய்து கொடுக்கப்படவில்லை என பொங்கி தீர்த்தனர்...
மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் தங்கள் பகுதிக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி பெண்கள், மனு கொடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...
நெல்லையில் ஏற்பட்ட தொல்லையால் அமைச்சர் உதயநிதி நெளிய ஆரம்பிக்க, மனு கொடுக்க வந்த பெண்களை பெண் காவலர்கள் இழுத்து வெளியே அனுப்பினர்...