எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என். ரவி, தலைமை நீதிபதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி எஸ்.வி. கங்கா புர்வாலா ஓய்வுபெற்றதை அடுத்து, நீதிபதி ஆர். மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், மும்பை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசு தலைவர் அண்மையில் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமுக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் 34வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கே.ஆர்.ஸ்ரீராம், 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வரை பதவியில் இருப்பார். கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்று, 1986ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார். மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வணிக சட்டம், சேவை வரி உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் ஆஜராகி உள்ளார்.