உயிர் பறிக்கும் ரேபிஸ்... எச்சரிக்கும் மருத்துவர்கள்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் கடந்தாண்டு 4 லட்சத்து 80 ஆயிரத்து 483 பேருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு அதில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதர்களின் உயிரை பறிக்கும் ரேபிஸ் நோய் என்றால் என்ன.. அதன் பாதிப்பு எப்படி இருக்கும்.. எவ்வாறு ரேபிஸ் நோய் பரவுகிறது.. அதிலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.. 

'ரேப்டோ வைரஸ்' குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ்தான் ரேபிஸ். இது நாய், பூனை, குதிரை, வௌவால் போன்ற விலங்குகளைத் தாக்குகிறது. அந்த விலங்குகள் மனிதர்களை கடிப்பதால் ரேபிஸ் நோய் பரவுகிறது. இந்த நோய் பாதிப்புகளில் பெரும்பாலான சதவீதம் நாய்க்கடியால் ஏற்படுகிறது. 

இந்த நோயால் உலகளவில் ஏற்படும் பாதிப்புகளில் 95 சதவீதம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களிலேயே பதிவாவதாகவும், அதிலும் ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்பில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில்தான் என்றும் ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.   

தமிழகத்திலும் கடந்த சில ஆண்டுகளாகவே நாய்க்கடி பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு மட்டும் 4 லட்சத்து 80 ஆயிரத்து 483 போ் பாதிக்கப்பட்டுள்ளனர். அவா்களில் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனைக்கு சென்ற காரணத்தினால் 43 போ் உயிரிழந்ததாகத் கூறப்படுகிறது.

இந்தாண்டு இதுவரை 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 3 பேர் உயிரிழந்திருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுகூட கோவையில் நாய்க்கடியின் வீரியம் அதிகமாகி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர், கண்ணாடித் துண்டால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக் கொண்ட சோக சம்பவமும் அரங்கேறியுள்ளது.  

மனிதர்களை ரேபிஸ் வைரஸ் தாக்கியதை சில அறிகுறிகளின் வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம். அதிகமான காய்ச்சல், தலைவலி, தொண்டைப்பகுதிகளில் உள்ள தசைகளில் நடுக்கம், வாயில் அளவுக்கு அதிகமாக எச்சில் சுரப்பது, தேவையற்ற மனஅழுத்தம், பதற்றம், பயம் ஆகியவை உண்டாகும். 

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும், நாய் அல்லது விலங்குகள் கடித்தால் உடனடியாக கடிபட்ட இடத்தை சுத்தம் செய்து மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

ரேபிஸ் நோய் பாதிப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியத் தவறி விட்டால் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளையும் செயலிழக்கச் செய்து உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும், அதனால், வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் அனைத்திற்கும் முறையாக தடுப்பூசிகள் செலுத்தி பராமரிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.


Night
Day