எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் திமுக மேயர் கலந்துக் கொண்ட வணிக வளாகம் அடிக்கல் நாட்டு விழாவினை மாநகராட்சி அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். மேயருக்கு எதிரான அதிகாரிகளின் புறக்கணிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வணிக வளாகம் கட்டுவதற்காக 2 கோடியே 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வணிக வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச் செல்வன் ஆகியோர் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை தொடக்கி வைத்தனர். ஆனால், இந்த விழாவில் மாநகராட்சி ஆணையாளர், அதிகாரிகள் என யாரும் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மேயர் சுந்தரி ராஜா, தன்னை விழாவிற்கு அழைத்த அதிகாரிகளே, விழாவிற்கு வரவில்லையா என்றும், திமுக ஆட்சியில் திமுக மேயருக்கே மதிப்பு இல்லையா என்றும் தனது கட்சிக்காரர்களிடம் புலம்பி தீர்த்தார்.
திமுக மேயரை செல்போனில் அழைத்தால் எடுப்பதில்லை, தங்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்று மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை குற்றச்சாட்டியுள்ளனர். இதற்கு பதிலடியாகத்தான் இந்த அடிக்கல் நாட்டு விழாவினை அதிகாரிகள் புறக்கணித்தார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
திமுக மேயர் - அதிகாரிகள் மோதல் போக்கால் பாதிக்கப்படுவது மக்கள் நலத்திட்ட பணிகள் தான் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திமுக அரசு ஆட்சியில் இருக்கும் போது, தன்னை அரசு அதிகாரிகள் புறக்கணிப்பதாக திமுக மேயரே பகிரங்கமாக புலம்புவது ஆட்சி நிர்வாகத்தின் லட்சணத்தை அம்பலப்படுத்தியுள்ளது.