உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு.கே.எம்.செரியன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு.கே.எம்.செரியன் மறைவுக்கு 
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார். 

உலக புகழ்பெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரான திரு. கே.எம்.செரியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாதது. மருத்துவத்துறைக்கே ஒரு பேரிழப்பாகும். 

இந்தியாவில் எவரும் செய்யாத அரியதொரு மருத்துவ சாதனையாக, ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்து காட்டிய பெருமைக்குரியவர். சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதல் முறையாக கரோனரி ஆர்ட்டரி பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காட்டிய சாதனையாளர், நாட்டில் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர், அறுவை சிகிச்சையின்றி இதய ஓட்டையை அடைத்து சிகிச்சையளிப்பதில் கைதேர்ந்தவர், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவராக விளங்கியவர் திரு.கே.எம்.செரியன் அவர்கள். மருத்துவத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளார். அன்னாரது தன்னலமற்ற சேவையை பாராட்டி அவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.  

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மருத்துவர் செரியன் அவர்கள் மிகுந்து மதிப்பும், மரியாதையும் கொண்டவர். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர். மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் (MMM) மருத்துவமனை தொடங்க புரட்சித்தலைவர் அவர்கள் 1986ஆம் ஆண்டு அனுமதி வழங்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து. மருத்துவர் கே.எம்.செரியன் அவர்களின் வேண்டுகோளினை  ஏற்று மெட்ராஸ்  மெடிக்கல் மிஷன் (MMM) மருத்துவமனை பூமி பூஜையில் கலந்து கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது சொந்த பணத்தில் 5லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அதேபோன்று மருத்துவர் கே.எம்.செரியன் அவர்களின் வேண்டுகோளினை  ஏற்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2004ஆம் ஆண்டு ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்ததையும் நினைத்துப்பார்க்கிறேன். மேலும்,புரட்சித்தலைவி அம்மா அவர்களின் விருப்பத்திற்கிணங்க மருத்துவர் கே.எம்.செரியன் அவர்கள், கருணையின் மறு உருவமாக விளங்கிய அன்னை தெரசா அவர்கள் தமிழகம் வந்தபோது அவர்களை விமான நிலையத்தில் வரவேற்று அழைத்து வந்ததையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். 

உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு.கே.எம்.செரியன் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மருத்துவ துறையை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

Night
Day