ஊழல்... முறைகேடு... லஞ்சம்... உண்மையை உளறிக்கொட்டிய திமுகவினர்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரே நபருக்கு டெண்டர் எடுத்து கொடுத்து பல கோடி ரூபாய் ஊழல் செய்வதாக திமுக நகர்மன்ற தலைவர் மீது சொந்த கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலரே குற்றசாட்டியுள்ளார். தேவைப்பட்டால் தலைவர் மீது நம்பிக்கையல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறி பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளார். திமுக மேயர் முதல் நகராட்சி தலைவர் வரை சொந்த கட்சியினராலேயே குற்றச்சாட்டுக்கு ஆளாவது தொடர்கதையாகி வருவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியின் நகர்மன்ற கூட்டம், நகர் மன்ற தலைவர் முத்துத்துரை, நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், ஆணையர் கூட்டத்திலிருந்து கிளம்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சி கவுன்சிலர்கள் அவரிடம் பதில்கள் பெறவேண்டி உள்ளதால், கூட்டம் முடியும் வரை அவர் இருக்க வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது திமுக மற்றும் எதிர்கட்சி கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

36 கவுன்சிலர்கள் உள்ள நகர மன்ற கூட்டத்தில் சிலருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட கூட்டம் முடிந்ததாக நகர்மன்ற தலைவர் அறிவித்து தேசிய கீதம் பாடத் தொடங்கினர்.

அப்போது தேசிய கீதம் பாடுவது பற்றி கவலைப்படாமல் 11-வது வார்டு கவுன்சிலர் மெய்யர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய 23வது வார்டு கவுன்சிலர் சத்யா கார்த்திகேயன், காரைக்குடி திமுக நகர் மன்ற தலைவர் முத்து துரை, ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும் திமுக கவுன்சிலர்களுக்கே நகர்மன்றத்தில் மக்கள் பிரச்னைகளை பேச வாய்ப்பளிக்க மறுப்பதாகவும், தேவைப்பட்டால், திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஒரே நபருக்கு பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் எடுத்து தருவதாகவும், அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடப்பதாகவும் நகர்மன்ற தலைவர் முத்துதுரை மீது பெண் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து நகர்மன்ற தலைவர் முத்து துரையிடம் கேட்ட போது, திமுக பெண் கவுன்சிலர், சாலையோர கடைகளில் அடாவடியாக வசூல் செய்வதாக வந்த புகரையடுத்து அவரை கண்டித்ததாகவும், இதனால் தனக்கு எதிராக பேட்டி கொடுப்பதாகவும் குற்றம்சாட்டினார்

காரைக்குடி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ள நிலையில் திமுக நகர மன்ற தலைவர் மீது திமுக பெண் கவுன்சிலரே நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டுவர இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

திமுக மேயர் முதல் நகராட்சி தலைவர் வரை சொந்த கட்சியினராலேயே குற்றச்சாட்டுக்கு ஆளாவது தொடர்கதையாகி வரும் சூழலில், திமுக தலைமைக்கு புதிய சிக்கலாக காரைக்குடி நகராட்சியில் பிரச்னை வெடித்துள்ளது உடன் பிறப்புகளை அதிருப்தியடைய செய்துள்ளது.

Night
Day