எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை கண்டித்து தலைமை செயலகத்தை நோக்கி பேரணியாக சென்ற பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் தலைமையகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதன் முடிவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் டாஸ்மாக் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் புறப்பட்டார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறியதால், அங்கு வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜனை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அழியா விருந்தினராக காவல் துறையினர் தனது வீட்டுக்கு வந்திருப்பதாக கூறினார். மேலும் ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளதாகவும், மாநில அரசின் எத்தகைய அடக்குமுறைக்கும் அடங்கமாட்டோம் என தெரிவித்தார்.
இதேபோல் பாஜக நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ள தியாகராய நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்ட பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி. செல்வம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வினோஜ் பி. செல்வம், தியாகராய நகரில் உள்ள தேவர் மகாலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.