சொத்துக் குவிப்பு வழக்கில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த 2006- 2011ம் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மீது, வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகையை மேற்கோள்காட்டி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த கடலூர் நீதிமன்ற உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த வழக்கு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், 6 மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி, கடலூர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.